தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேலைத்திட்டங்களுக்காகப் பணம் வழங்கப்பட்டது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது தொடர்பில் அவரிடம் விளக்கம்கேட்டு கடிதம் அனுப்பப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
விக்னேஷ்வரனிடமிருந்து வருகின்ற பதிலையடுத்து, உண்மை நிலைமையை செய்தியாளர்களின் ஊடாகத் தெளிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் அடங்கிய கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மாவை சேனாதிராஜா இதனை அறிவித்தார்.
தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அளித்திருந்த உறுதிமொழி, தற்போதைய அரசால் இன்னும் நிறைவேற்றப்படாதிருப்பது குறித்து, இந்தக் கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்துடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சிறைகளில் உள்ள தமிழ் இளைஞர்கள் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள், பட்டதாரிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கப்படும் உள்ளிட்ட உறுதிமொழிகளும் இன்னும் நிறைவேற்றப் படவில்லை என்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் ஒருங்கிணைந்து செயற்படும் வகையில் அந்தக் கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது பற்றிய விஷயம் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும், இது தொடர்பில் அடுத்த வாரத்தில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.