விசேட தேவையுடைய இராணுவத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது..

பிரேரிக்கப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கக் கோரி, விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுக்கும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் விசேட தேவையுடைய இராணுவத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள விசேட அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இருந்து அவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனினும், 12 வருடங்கள் சேவை காலத்தை நிறைவு செய்த நிலையில் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் பெறும் ஓய்வூதிய கொடுப்பனவை, 12 வருட சேவை காலத்தை பூர்த்தி செய்யாத விசேட தேவையுடைய இராணுவத்தினருக்கும், எதிர்வரும் காலத்தில் கொடுப்பனவாக வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.