அமெரிக்காவில் நாளை(08) ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம் செய்கின்றனர்.
உலகமே பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 14 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்க தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும்(வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும்(70) இடையே ‘நீயா, நானா?’ என்கிற அளவுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்தாலும், இருவருக்கும் இடையேயான ஆதரவு வித்தியாசம் குறைவாக இருக்கிறது.
எனவே வாக்காளர்களை இறுதிக்கட்டமாக கவருவதில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு, உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிலாரி தனது பிரசாரத்துக்கு பாப் பாடகிகள் பியான்சே, கேத்தி பெர்ரி ஆகியோரை பயன்படுத்தி வருகிறார்.
டிரம்பைப் பொறுத்தமட்டில் நட்சத்திர பிரசாரகர்கள் யாரும் இல்லை என்ற பட்சத்திலும் அவர் தனது குடும்பத்தினரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்.
ஹிலாரி, வடக்கு கரோலினா மாகாணத்தின் தலைநகரான ராலே நகரில் தனது கடைசி பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதுபற்றி அவரது பிரசார குழுவினர் கூறும்போது, “தனது இறுதி பிரசாரத்தின்போது ஹிலாரி ஒவ்வொருவருக்கும் பலன் அளிக்கிற வகையில் பொருளாதாரத்தை உருவாக்க வைத்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறுவார். உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது சாமானிய மக்களுக்கும் பலன் கிடைக்கத்தக்க வகையில், அவர் அமெரிக்கா தொடர்பான தனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்துவார்” என்று கூறுகின்றனர்.
இறுதி பிரசாரத்துக்கு முன்னதாக ஹிலாரி, கணவர் பில் கிளிண்டனுடன் ஒரு பிரமாண்ட கூட்டத்தில் பேசவும் ஏற்பாடு ஆகி உள்ளது. இதில் ஜனாதிபதி ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் பங்கேற்க உள்ளனர்.
இந்த தேர்தலில் ‘பாப்புலர் ஓட்டு’ என்றழைக்கப்படுகிற மக்களின் வாக்குகளை யார் அள்ளினாலும், தேர்தல் சபையின் 538 வாக்குகளில் 270 ஓட்டுகளை பெறுகிறவர்தான், அமெரிக்க ஜனாதிபதி நாற்காலியை அலங்கரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.