தாஜூதீனின் கொலை விசாரணையினை திசை திருப்ப சூழ்ச்சி – ஜனாதிபதி குற்றச்சாட்டு

பிரபல றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணையை குழப்பியடிக்க சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ் சாட்டியுள்ளார்.

ஆங்கில நாளிதழொன்றிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; குறித்த கொலை தொடர்பான உண்மைத் தன்மையை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இது குறித்த விசாரணைகளை துரிதமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டும், மந்தகதியிலும் செல்வதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, குறிப்பாக அவன்ட் கார்ட் விவகாரத்தில் துப்பாக்கிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் அதன் தொடர் இலக்கங்கள் அழிந்துவிட்டதாக அரச பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை தெரிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்றே தாம் வலியுறுத்தி வந்ததாக தெரிவித்த ஜனாதிபதி, அதனை சில ஊடகங்கள் திரிபுபடுத்தி விசாரணையை விமர்சிப்பதாக செய்திகளை வெளியிட்டு சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.