பவித்ராக்கே தெரியாத ஒரு விடயம் !!

முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற புதிய கட்சி தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. இது குறித்து ஜீ.எல்.பீரிஸிடமே கேட்க வேண்டும். நான் உட்பட கூட்டு எதிர்க் கட்சியினர் தற்போது புதிய தேசிய சக்தி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் புதிய கட்சி பற்றி தேடி அறிய நேரம் இருக்கவில்லை.

எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆசியுடனேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும், ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சியில் இணைந்து கொண்டால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே கூட்டு எதிர்க் கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் புதிய கட்சி தொடர்பில் அவர் எதனையும் அறியாதது போல் பேசி வருவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.