ஜனாதிபதியாக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 30 இலட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்தல் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் வரும் 2017 ஜனவரி 20ம் திகதியன்று ஜனதிபதியாக பதவியேற்க உள்ளார்.
இதனிடையே தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த டிரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20 அல்லது 30 இலட்சம் வெளிநாட்டினரை உடனடியாக வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், குற்றப் பின்னணியில் இருப்பவர்கள், ரெளவுடிகள், போதை மருந்து கடத்தல்காரர்கள் என சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைந்து இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்பார்த்தே, அவர் ஜனாதிபதியாக தகுதியில்லாதவர் என்று அமெரிக்காவில் பல பிரிவினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.