சட்டமா அதிபர் இராணுவ சதிப்புரட்சி அல்லது ஜனநாயகத்தையும் அழிக்கும் சதித்திட்டத்தின் பங்காளி ஆவாரா என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை தொடர்புடைய அறிக்கையை 22 மாதங்கள் தனது தலையணையாக மாற்றி நித்திரை கொள்ளும் உரிமை சட்டமா அதிபருக்கு இல்லை. இது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய நிலையிலும் அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில இதனை கூறியுள்ளார்.
ஊடகங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ய வேண்டியுள்ளது. 2015 ஜனவரி 16 ஆம் திகதி இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு சிக்கிய முதல் நபர் நான்.
ஜனவரி 8 ஆம் திகதி இராணுவ சதிப்புரட்சியின் மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்ததாக கூறி என்னை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
என்னிடம் விசாரணை நடத்தி 22 மாதங்கள் கடந்துள்ளது. இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிடவில்லை என நாங்கள் கூறினோம்.
ஜனவரி 8 ஆம் திகதி இரவு இராணுவ சதிப்புரட்சி மூலம் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்ததாக அமைச்சர் மங்கள சமரவீரவே முறைப்பாடு செய்தார்.
இது தேசிய பாதுகாப்புக்கும் ஜனநாயகத்திற்கும் பிரச்சினை எனக் கூறியே இதனை விசாரிக்குமாறு மங்கள சமரவீர குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
வெளிவிவகார அமைச்சர் தேசிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகம் பிரச்சினை பற்றி முறைப்பாடு செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வழக்கு தொடர சாட்சியங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது குறித்த ஆலோசனையை சட்டமா அதிபர் 22 மாதங்களாக வழங்காமல் இருந்து வருகிறார்.
இதுவரை சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கவில்லை.
இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, பொலிஸூக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க, விசாரணை நடத்தி அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபர் இன்னும் ஆலோசனை வழங்கவில்லை என்றும் கூறினார்.
எனக்கு எதிராக தனிப்பட்ட காரணத்தில் ஒருவர் முறைப்பாடு செய்ததும் 24 மணிநேரத்தில் சட்டமா அதிபர் அறிக்கைகளை பார்த்து ஆலோசனை வழங்கினார்.
காலையில் சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்படுகிறது. மாலையில் என்னை கைது செய்ய பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை குறித்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் முறைப்பாடு செய்தும் சட்டமா அதிபர் 22 மாதங்களாக உறக்கத்தில் இருக்கின்றார்.
தனக்கு பாதிப்பான அறிக்கைகள் சட்டமா அதிபரின் கண்களுக்கு தெரியாது என நினைக்கின்றேன் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.