நாடாளுமன்ற உறுப்பினர்கள் 58 பேருக்கு, குத்தகையின் அடிப்படையில் வாகனங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் அதற்கு வாடகையாக மாதத்துக்கு 2 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியதையடுத்து சபை இன்று(18) சற்றுநேரத்துக்கு சூடுபிடித்திருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வியாழக்கிழமையன்று சபையில் கேட்டிருந்த கேள்விகளுக்கே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பதிலளித்தார்.
தொடர்ந்து பதிலளித்த நிதியமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் தேவையான வாகனங்களுக்கு மேலதிகமாக சகல அமைச்சுகளுக்கும் தேவையான வாகனங்களை குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த குத்தகையின் கீழ் பெற்றுக் கொள்ளும் வாகனங்களின் ஊடாக அரசாங்கத்துக்கு எவ்விதமான நட்டமும் இல்லை. அரசாங்கத்துக்கு இலாபமே கிடைத்துள்ளது.
அரசாங்கத்தைச் சேர்ந்த எம்.பிக்களுக்கு பல்வேறான வேலைகள் இருகின்றன. எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் இதுதான் வித்தியாசமாகும்.
ஆகையால், அவர்களுக்கு வாகனங்களை கொடுக்க வேண்டும். உங்களுக்கு வாகனம் (அனுரகுமார திஸாநாயக்க) தேவையாயின் இந்தப் பக்கமாக வாருங்கள்.
இந்தச் செயற்பாட்டை முறைப்படுத்துவோம். 58 வாகனங்களையும் அரசாங்கம் வழங்கவில்லை. தனியார் நிறுவனமே வழங்குகின்றது. அதனால், அரசாங்கத்துக்கே இலாபமாகும்.
குறுக்கிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இவை தொடர்பில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக்கு முன்வைத்துள்ள பரிந்துரைகள் என்னிடம் இருக்கின்றது.
வற் (வரி) இன் ஊடாக 180 கோடி ரூபாவை அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது என்று சுட்டிக்காட்டியதுடன் நீங்கள் 58 பேருக்கு வாகனத்தை கொண்டுவருவதற்கு 243 கோடி ரூபாவை செலவழிக்கின்றீர்கள். அது நியாயமானதா? அதேபோல இந்த வாகனங்களை கொண்டு நடத்துவதற்கும் மக்களின் பணமே செலவாகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
குறுக்கிட்ட நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்த 58 வாகனங்களின் ஊடாக அரசாங்கத்துக்கு 253 மில்லியன் கிடைத்துள்ளது. இந்த வாகனங்களை தனியார் நிறுவனமே இறக்குமதி செய்கின்றது. அதற்கான கட்டணத்தை அரசாங்கம் செலுத்தவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில், வாகனத்தை கொண்டு வருவதற்கு உங்களுக்கு அனுமதிப்பத்திரம் கிடைக்கிறது. அதற்கு எதிர்ப்பில்லை.
ஆனால், அரசாங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொண்டு வந்தால்தான் உங்களுக்கு பிரச்சினையாகும். இது ஊடகங்களுக்கு நீங்கள் நடத்தும் கண்காட்சியாகும் என்றார்.
இதன்போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியமையால் சபை சூடுபிடித்தது. சபையை கட்டுப்படுத்துவதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய, உறுப்பினர்களின் சிலரின் பெயர்களை பெயர் குறிப்பிட்டார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=UFbuPttwHUk” width=”560″ height=”315″]