மஹிந்த ராஜபக்ஷ ஜாதிக ஹெல உறுமய கட்சியை விட்டு பிரிந்து சென்றமையே அவரது தோல்விக்கு முழு காரணமாக அமைந்தது என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறுகையில்;
மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை இதுவரையில் வழங்கப்படவில்லை, இவ்வாறு இருக்கையில் மக்களது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படவும் இல்லை.
ஆகவே மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் முகமாகவும், ஜாதிக ஹெல உறுமய குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனையினை பெற்றுக்கொடுக்கும் முகமாகவும் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளது.
நாட்டில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளதாக காணப்படவில்லை, அது அரசாங்க மதமும் இல்லை ஆனால் அரசியல் யாப்பின் 9ஆம் சரத்தின் படி பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இதே போன்று மனித உரிமைகள் பேணப்பட வேண்டும், அதன் அடிப்படையில் சமய கொள்கைகள் காணப்பட வேண்டும்.
மேலும், புதிய அரசியல் யாப்பில் பொலிஸ் துறையை பொறுத்த வரையில் மொழியின் அடிப்படையில் சேவைகள் அமைய வேண்டும், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் பொலிஸ் சேவையில் தமிழ் மொழி பேசக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவும் அமைச்சர் பாட்டளிசம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.