ஆவா குழுவில் மறைத்திருந்த மற்றுமோர் உண்மையினை ராஜித வெளியிட்டார்.

மக்களின் ஆசியுடன் ஆட்சிப்பீடத்தை கைப்பற்ற முடியாதவர்கள் பல்வேறான முயற்சிகளையும் சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் இராணுவச் சதி. ஆனால் இராணுவச் சதியின் ஊடாக, இலங்கையில் யாருக்கும் ஆட்சிப்பீடம் ஏறமுடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வவுனியா பொலிஸ் நிலையத்துக்கான நீர் சுத்திகரிப்பு மத்திய நிலைய திறப்பு விழா, நேற்று(20) இடம்பெற்றது.

அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அவரிடம், வடக்கு பாதுகாப்பு தொடர்பில் திருப்தி கொள்ள முடியாதுள்ளதாக ஓய்வு பெய்ற இராணுவ ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளாரே என்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் ராஜித சேனரத்ன பதிலளிக்கையில்;

வடக்கு பாதுகாப்பு தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என்றால், அந்த நிலைமையை உருவாக்கியவர்களே அவர்கள் தான்.

அந்நிலைமைக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை தெளிவாகவே கூறுகின்றேன்.

வட மாகாணத்தில் இவ்வாறான ஆயுதக்குழுக்கள் உருவாவதற்கு, இந்த பிரிவினர்தான் அடிப்படையாக இருந்தனர்.

அவ்வாறான சூழ்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.

“வடக்கில், ஆவா குழுவை உருவாக்கியதன் நோக்கம் வேறாகும்.

2015ம் ஆண்டு தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்தக் குழு உருவாக்கப்பட்டது. எனினும். அந்த முயற்சி கைகூடவில்லை.

அந்தக்குழுவை, உருவாக்கியவர்கள் யாரென்று எங்களுக்கு தெரியும். அவர்கள் தொடர்பிலான சகல அறிக்கைகளும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் இருக்கிறது.

ஆவா குழுவை உருவாக்கியவர்கள்தான் தற்போது பாதுகாப்பு இல்லை என்று பரப்புரை செய்கின்றனர்..”

இன்னும்,இலங்கையில், இராணுவ சூழ்ச்சிக்கு இடமிருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

அவ்வாறானதொரு நிலைமையொன்று ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாகும். எனினும், இலங்கையில் அது இடம்பெறாது.

ஜனநாயக வழியில் ஆட்சிப்பீடம் ஏற முடியாது என்று அவர்களுக்கு தற்போது தெரியும். ஆகையால்தான் இராணுவ சூழ்ச்சி இடம்பெறுவதாக பரப்புரை செய்கின்றனர் எனவும் தெரிவித்தார்.