மாணவர்களுக்கான போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய குழு நியமனம்..

பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பான போக்குவரத்தொன்றை ஒழுங்குபடுத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கவும், அந்த சேவையின் தரத்தை உயர்த்துவதுமே இதன் பிரதான நோக்காகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோத்தாகொட தெரிவித்தார்.

தற்போது பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக 40,000 வாகனங்கள் சேவையில் ஈடுபடுகின்றன.

இந்த குழுவை நியமிப்பது தொடர்பில் உரிய தரப்பினர்களிடையில் கலந்துரையாடல் நடத்தியுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கூறினார்.

எதிர்வரும் சில தினங்களில் இது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.