25,000 ரூபா தண்டப்பணத்தில் மற்றம் இல்லை – சட்ட திருத்தத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை..

போக்குவரத்து விதிகளை மீறும்  7 விதமான குற்றங்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள  25,000 ரூபா  தண்டப்பணம் எக்காரணம் கொண்டும்  மீளப்பெறவோ, திருத்தங்கள் கொள்ளப்படவோ மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், உரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு குறித்த  இச்சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில்  நிறைவேற்றுவோம்   என்றும்   அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான   ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

உண்மையில் இவ்வாறு    7 விதமான போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா  தண்டப்பணம் விதிக்குமாறு  பரிந்துரையை   முன்வைத்ததே  நான்தான் எனவும்   அமைச்சரவைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில்   நேற்று(30) நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன அங்கு மேலும்  குறிப்பிடுகையில்:

நாட்டில்  பாரியளவில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.   அதிகளவில் மரணங்களும் இடம்பெறுகின்றன.   அதுமட்டுமன்றி இடம்பெறுகின்ற விபத்து சம்பவங்களினால் அதிகளவானோர்  விபத்து  பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.  அதனால் அரசாங்கம்  பாரிய செலவை  பொறுப்பேற்கவேண்டியுள்ளது.

எனவே,  இதில்  எந்த மாற்றமும் ஏற்படாது.  25000 ரூபா தண்டப்பணத்தில் எந்த குறைப்பும் செய்யப்படமாட்டாது. இது தொடர்பான சட்டமூலம் திருத்தப்பட்டு  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.

மக்கள்  எங்களுடன்  இருக்கின்றனர்.  தற்போது  இந்த  தண்டப்பண அதிகரிப்பை  எதிர்த்து  பஸ் சேவையில் ஈடுபடுவோர்  வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.  இதற்கு  மக்களே பதிலளிக்கவேண்டும்.

எனவே  தண்டப்பணத்தை குறைக்க முடியும் என  யாரும் எண்ணவேண்டாம். அது குறைக்கப்படமாட்டாது, எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.