பாக்.அணி வீரர் ஹபீஸிற்கு சர்வதேச கிரிகெட்டில் மீளவும் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி..

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஹபீஸை சர்வதேச கிரிகெட்டில் மீண்டும் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் முகமது ஹபீஸ். பேட்டிங் மட்டுமின்றி சுழற்பந்தும் வீசக்கூடியவர். கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டின் போது பந்தினை எறிவதாக குற்றச்சாட்டில் சிக்கினார்.

24 மாதங்களுக்குள் 2-வது முறையாக இத்தகைய சர்ச்சையில் மாட்டியதால் பந்து வீச ஓராண்டு தடை விதித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐ.சி.சி. உத்தரவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பிரிஸ்பேனில் தேசிய கிரிக்கெட் மையத்தில் தனது பந்து வீச்சை மீண்டும் சோதனைக்குட்படுத்தினார். இதில் பந்து வீசும் போது அவரது முழங்கை அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்குட்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சர்வதேச கிரிகெட்டில் மீண்டும் பந்து வீச ஐ.சி.சி. நேற்று(30) அனுமதி அளித்தது. ஆனாலும் அவரது பந்து வீச்சை நடுவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.