இந்தியாவை தொடர்ந்து ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து அமெரிக்கா அவதானம்..

பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பிற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் ஆதரவு அளித்துள்ளார்.

 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் திகதி இரவு அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ம் திகதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு அளித்து வரும் நிலையில் தற்போது அமெரிக்காவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில் “ஊழலை ஒழிக்க ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம். அமெரிக்க மக்கள் இந்தியாவில் வேலை தொடர்பாக வசித்து வருகின்றனர். ரூபாய் நோட்டு மாற்றம் குறித்து முன்னரே இந்திய மக்களுக்கு தெரிவித்திருந்தால் தேவையற்ற சிரமங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் ஊழல் ஒழிப்பிற்கு இது முக்கியமான நடவடிக்கை என்று நான் கருதுகிறேன்”

இந்தியர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க மக்களுக்கும் இந்த அறிவிப்பால் சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மைதான். ரூபாய் நோட்டு மாற்றம் குறித்த அறிவிப்பால் இந்தியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கை ஒன்றை, அமெரிக்க தூதரகம் மூலமாக இந்தியாவில் வசிக்கும் அமெரிக்க மக்களுக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.