மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல் இன்று(06) மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று(05) இரவு 11.30 அளவில் உயிரிழந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது போயஸ் தோட்ட இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், அங்கு அவரின் உடலுக்கு அவரது இல்லத்தில் குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாகவும் இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.