அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக 10 டாலர் நோட்டில் பெண் உருவப்படம் அச்சிடப்பட உள்ளது.பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுத்தந்த 19வது சட்ட திருத்தம் அமெரிக்க பார்லி’யில் 1920ல் நிறைவேறியது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வைக் கொண்டாடும் வகையில் 10 டாலர் நோட்டில் ஒரு பெண்ணின் படத்தை அச்சிட அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.இந்த கரன்சியின் வடிவமைப்பு, அதில் இடம் பெற விரும்பும் பெண்ணின் உருவப்படத்தை உள்ளிட்ட கருத்துகளை தெரிவிக்குமாறு, பொதுமக்களை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் அமெரிக்க கருவூலச் செயலர் ஜேக்கப் லியுவ் கரன்சியின் இறுதி வடிவத்தையும், அதில் இடம் பெறும் பெண்ணின் படத்தையும் முடிவு செய்வார்.
இந்த கரன்சியில் சமூக சீர்திருத்தவாதி சுசூன் பிரவுன்வெல் அந்தோணி, ஆபிரிக்க – அமெரிக்கரும், பெண்ணியவாதியுமான ஹாரியட் டப்மன், முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட் இனது மனைவியான எலினர் ரூஸ்வெல்ட், விடுதலை இயக்கத்தின் தாய் என வர்ணிக்கப்படும் ஆபிரிக்க – அமெரிக்கரான ரோசா பார்க்கர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கரன்சி வரும் 2020ல் புழக்கத்திற்கு வரும்.தற்போதுள்ள 10 டாலரில் சுதந்திர அமெரிக்காவின் முதல் கருவூலச் செயலர் அலெக்சாண்டர் ஹாமில்டன் படம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 1886ல் வெளியிடப்பட்ட ஒரு டாலர் மதிப்பிலான வெள்ளி கரன்சியில் அந்நாட்டின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் மனைவி மார்த்தாவின் படம் இடம் பெற்றிருந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.