அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்து செய்து இலங்கை பிரஜாவுரிமையைப் பெறுவதற்கு முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கை குடியுரிமையைப் பெறுவதற்காக குமார் குணரத்னம் அனுப்பி வைத்திருக்கும் விண்ணப்பத்தை ஆராய்ந்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களப் பணிப்பாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்ரேலியாவில் தஞ்சம் புகுந்த குமார் குணரத்னம் பல வருடங்களுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு நாடு திரும்பியிருந்தார்.
அதன் பின்னர் அவர் குடிவரவு, குடியகல்வு சட்டங்களை மீறி அரசியலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் அவர் கடந்த இரண்டாம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதோடு அவருக்கு மூன்று மாதகால தற்காலிக வீசா வழங்கியிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.