மாகம்புரத் துறைமுகம் (ஹம்பாந்தோட்டை துறைமுகம்) விற்பனையின் போது, 100 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்துவதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கூட்டு எதிர்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்;
மாகம்புர துறைமுக விற்பனை தொடர்பிலான பேச்சுக்கள் ஹொங்கொங்கில் நடைபெற்றுள்ளன. அதன்போது துறைமுக விற்பனையை அடிப்படையாகக் கொண்டு மோசடியாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. நிதி மோசடி தொட ர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
பெறுமதி வாய்ந்த துறைமுகம் சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் 80 சதவீதமான பங்கு 1.1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் துறைமுகத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்குத் தெரியாமலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கை சட்டத்துக்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனவும் தெரிவித்திருந்தார்.