ஹம்பாந்தோட்டை துறைமுக விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வாசுதேவவினால் வழக்கு..

ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு வழக்குத் தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொரளை என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்;

ஸ்ரீலங்கா காப்புறுதிக் கூட்டுத்தாபனம் குறைந்த விலையில் விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்ட போது அரச சொத்துக்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது சட்டவிரோதமானது எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் குறித்த கொடுக்கல் வாங்கலை ரத்து செய்திருந்தது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு வழங்கப்பட உள்ளது. இந்த 99 ஆண்டு கால குத்தகை முடிவடையும் காலத்தில் மீளவும் 99 ஆண்டுகள் குத்தகை காலத்தை நீடிக்கக்கூடிய சரத்து ஒன்று உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வருகை தருவதில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது எனினும், ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் வெளிநாட்டவருக்கு வழங்குவதனையே எதிர்க்கின்றோம் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.