கோப் குழுவின் அறிக்கை குறித்து அதன் தலைவரான நாடளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நேற்று முன்தினம்(21) கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கோப் குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியதனூடாக சபாநாயகரின் பொறுப்பை பிரதமர் கையேற்றுள்ளதாக அந்தக் கடிதத்தினூடாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்து பிரதமர் அலுவலகம் நேற்று(22) விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில்,
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை சபாநாயகரின் அனுமதியுடன் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி, சம்பந்தப்பட்ட அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த செயற்பாடுகள் குறித்து பல சந்தர்ப்பங்களில் பிரதமரால் நாடாளுமன்றத்துக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், இந்த அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுவதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டது.
சபாநாயகரின் அதிகாரம் பிரதமரால் பயன்படுத்தப்பட்டது என இந்த சந்தர்ப்பத்தில் எந்தக் கருத்தையும் வெளியிடாத நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, தற்போது அவ்வாறானதொரு வாதமொன்றை முன்வைக்க முயற்சிக்கின்றார்.
சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பிரதமரால் அறிக்கை அனுப்பப்பட்டமை சட்டரீதியான செயற்பாடாகும்.
தமக்கு கீழே பணியாற்றுபவர்கள் குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது அது குறித்து மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் கருத்தை அறிவது சாதாரண சம்பிரதாயமாகும்.
இவ்வாறு கருத்து கோருவதால் நாடாளுமன்றத்தால் முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் எந்தவொரு அழுத்தமும் ஏற்படாது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை வரையறை செய்வதாக அமையாது. தடை ஏற்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.