பாலஸ்தீன எல்லைக்குள் குடியிருப்புகளை கட்டும் இஸ்ரேல் நாட்டு குடியமர்த்தல் திட்டத்தை ஆதரிக்க முன்வராத அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலைப் பற்றிய அவதூறான கருத்தை வெளியிட்டு வருவதால் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
1967-ஆம் ஆண்டு நடந்த நீண்ட போரின் இறுதியில் பாலஸ்தீன நாட்டில் இருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் அடாவடியாக பறித்தது. இப்பகுதியை இஸ்ரேலுக்கு சொந்தமானதாக சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
சமீபகாலமாக, பாலஸ்தீன நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் கிழக்கு ஜெருசலேமிற்கு நெருக்கமாக இஸ்ரேல் கட்டிவரும் சட்டவிரோத குடியிருப்பு (செட்டில்மென்ட்) வீடுகள் பிராந்தியத்தின் அமைதிக்கு முக்கிய அச்சுறுத்தலாக அமையலாம் என்று உலக நாடுகள் அச்சப்பட்டன.
இஸ்ரேல் மற்றும் அதன் அண்டை நாடான பலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்சினைக்கு முடிவுகட்டும் ‘இரு நாடுகள்’ என்ற தீர்விற்கு முக்கிய தடையாக இஸ்ரேல் கட்டி வரும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.
இரு நாடுகள் பரிகாரத்தை சாத்தியமற்றதாக மாற்றவேண்டும் என்பதே இஸ்ரேலின் எண்ணமாக உள்ளது என்று ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட அறிக்கை சுட்டிக்காட்டியது.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதியில் 5 ஆயிரம் குடியிருப்புக்களை கட்டுவதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சர்வதேச எல்லைக்கோட்டு சட்டத்தை மீறிய வகையில் அப்பகுதியில் நடந்துவரும் கட்டுமானப் பணிகளை எல்லாம் உடனடியாக தடுத்து நிறுத்தவும் நியூசிலாந்து, மலேசியா, வெனிசுலா, செனெகல் ஆகிய நாடுகளின் சார்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும் வாக்களிக்க இருந்த நிலையில், தனது வெட்டுரிமை (வீட்டோ) அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தி மேற்கண்ட தீர்மானத்தை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், தற்போதைய அதிபர் பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு அவரது ஆலோசனையை நிராகரித்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்காமல் அமெரிக்கா நடுநிலை வகித்தது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் மொத்தம் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகளின் அமோக ஆதரவுடன் இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை பலஸ்தீன அரசு கொண்டாடிவரும் அதேவேளையில், தன்னை கைவிட்ட அமெரிக்காவுக்கு இஸ்ரேல் அரசு கண்டனம் தெரிவித்தது.
எங்கள் நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு குறிப்பிட்டிருந்தது.
இஸ்ரேலை கட்டுப்படுத்தக்கூடிய இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி மாதம் 20-ம் திகதிக்கு பிறகு காட்சிகள் மாறும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், தங்களது நடவடிக்கைக்கு எதிராக பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஐக்கிய நாடுகள் சபையுடனான உறவுகளை தொடர்வது தொடர்பாக மறுமதிப்பீடு செய்யப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக, கருத்து வெளியிட்டுள்ள அவர், இஸ்ரேலில் உள்ள ஐ.நா.சபை பிரதிநிதிகள் விவகாரம் தொடர்பாகவும், ஐ.நா.சபை சார்ந்த துணை அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாகவும், ஐ.நா. சபையுடனான அனைத்து வகை உறவுகள் தொடர்பாகவும் மறுமதிப்பீடு செய்து, ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
ஏற்கனவே, ஐ.நா.சபையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் – இஸ்ரேலுக்கு எதிரான மனப்போக்கு கொண்ட ஐந்து துணை அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த 78 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதியுதவியை நிறுத்துமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற உத்தரவுகள் மேலும் தொடரும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.
தற்போதைய இஸ்ரேல் அரசு வலதுசாரி சித்தாந்தத்தை கொண்டதொரு அரசைப்போல் செயல்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
பலஸ்தீனம் – இஸ்ரேல் இடையிலான விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கை என்ன என்பது தொடர்பாக நேற்று வாஷிங்டன் நகரில் சுமார் ஒருமணி நேரம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி கூறியதாவது:
இஸ்ரேல் நாட்டினருக்கும் பலஸ்தீனியர்களுக்கும் இடையில் நீண்டகால அமைதி நீடிக்க வேண்டுமானால், இருநாடுகளும் தனித்தனி நாடுகள் என்ற நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்.
அண்டை நாட்டினருடன் சமாதானமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் வகையில் இஸ்ரேலை தனி யூதக் குடியரசு நாடாக அறிவிப்பதுதான் தீர்வாக இருக்க முடியும்.
மேலும், பலஸ்தீன மக்களுக்கான எதிர்கால சுதந்திரம் மற்றும் கண்ணியம் கிடைக்க, இதுதான் ஒரேவழியாகவும், அந்த பிராந்தியத்தில் இதுபோன்ற சூழல் கனிவதுதான் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கு உகந்ததாகவும் அமையும். இதற்காக எனது பதவிக்காலத்தில் நான் முழுமூச்சுடன் பாடுபட்டு வந்துள்ளேன்.
இஸ்ரேலும் பலஸ்தீனமும் ஒரேநாடு என்ற நோக்கத்தில்தான் பலஸ்தீனத்தில் குடியிருப்பு பகுதிகளை இஸ்ரேல் உருவாக்கி வருகிறது. இது இஸ்ரேல் நாட்டின் அரசியல் வரலாற்றில் வலதுசாரி ஆதிக்கம் தலைதூக்குவதையே உணர்த்துகிறது. இஸ்ரேலின் எதிர்காலத்துக்கு இது உகந்ததாக இருக்க முடியாது.
இஸ்ரேலும், பலஸ்தீனமும் இருவேறு தனித்தனி நாடுகள் என்ற எங்களது கோட்பாட்டை நிலைநாட்டவே பாலஸ்தீன மண்ணில் குடியிருப்புகளை கட்டிவரும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஐ.நா.சபையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது நாங்கள் நடுநிலை வகிக்க முடிவு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜான் கெர்ரியின் இந்த கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
(நன்றி – மாலை மலர்)