பாகிஸ்தான் விமான சேவையுடன் ஸ்ரீலங்கன் விமான சேவை குத்தகை அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் காரணமாக சுமார் 15.9 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் 2016ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கமைய, இலங்கையில் பெற்றுக் கொண்ட விமானங்கள் ஊடாக செயற்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு குறித்த பணத்தை பாகிஸ்தான் செலுத்த வேண்டியிருந்தது. இருந்த போதிலும், அந்த பணத்தை பாகிஸ்தான் விமான சேவை வழங்க தவறியுள்ளமையே ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு இவ்வாறு நட்டம் ஏற்பட காரணமாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த ஒப்பந்தத்தை மீண்டும் ஆராய்ந்து உரிய தீர்வு ஒன்றை தீர்மானிக்குமாறு, ஸ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர் சபையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்தேவிடம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஒப்பந்தம் காரணமாக 2016ஆம் ஆண்டு ஜனவரி – மார்ச் மாதம் நிறைவடையும் போது ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்டுள்ள நட்டம் சுமார் 2.3 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தம் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், முறையான கேள்விப் பத்திர நடைமுறைகள் இன்றி மேற்கொண்டமையின் காரணமாக இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாகிஸ்தானுடன் குறித்த ஒப்பந்தத்தை இரகசியமாக கையொப்பமிடுவதற்கு தலையிட்ட தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் போது குத்தகைக்கு மேலதிகமான மேலும் சில விசேட நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக சில முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், மேலும் சந்தேகம் எழுந்துள்ளது.