தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மோடி தலையிட வேண்டுமென கோரிக்கை.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் தலையிட வேண்டுமென தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மீனவர் பிரச்சினை தொடர்பாக இதுவரை நடைபெற்ற 4 கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. குறிப்பாக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக்கு நீரிணை பகுதியில், இருதரப்பும் பரஸ்பர நல்லிணக்கத்துடன் கூடிய மீன்பிடி உரிமை வேண்டும் என தமிழக மீனவர்களின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்தக் கோரிக்கையை பிடிவாதமாக இலங்கை அரசு ஏற்க மறுக்கிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் கொடுமையான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு கண்டு கொள்ளவே இல்லை. 

இன்னும் சொல்லப்போனால் பேச்சுவார்த்தைக்குப் பிறகுதான் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழக மீனவர்களை சிறைபிடிப்பது, மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வது போன்ற மனித உரிமைகள், வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோருகின்றனர். 

அதுவும் நிராகரிக்கப்பட்டு, தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சரமாரியாக கைது செய்யும் அநியாயமான நடவடிக்கையை அரக்கத்தனமாக இலங்கை அரசு செய்து வருகிறது. 

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையை டெல்லியில் முன்னின்று நடத்திய இந்திய அரசும் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களின் படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் முடிவை மாற்றிக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். 

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கவும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு உரிய அழுத்தத்தை தூதரக ரீதியாகவோ, பிரதமரே நேரில் தலையிட்டோ முடிவு காண வேண்டும் என தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.