ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு..?

ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு..?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்வது குறித்து கவனம் செலுத்தி வருவதாக சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்ட தினத்திற்கு மறுநாள் வழக்கு விபரங்களை வழங்குமாறு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணம் கிடைக்கப் பெறும் வரையில் மேன்முறையீடு செய்வது குறித்த ஏனைய விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு குறித்த தீர்ப்பு கடந்த 24ம் திகதி நள்ளிரவு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்கவினால் வழங்கப்பட்டிருந்தது.

கொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த அனைத்து சந்தேக நபர்களும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்லர் என விசேட ஜூரிகள் சபையொன்று ஏகமனதாக தீர்மானித்திருந்ததன் அடிப்படையில் சந்தேக நபர்கள் குற்றமற்றவர்கள் எனக்கூறி விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இதேவேளை, விரைவில் இந்த வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.