அமெரிக்காவுக்கு வரும் கியூபா மக்களுக்கு ஓராண்டில் குடியுரிமை வழங்க ஒபாமா அறிவிப்பு…

அமெரிக்காவில் ஓராண்டு காலம் வசிக்கும் கியூபா மக்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு சென்றார்.

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருந்த கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோ – ஒபாமாவை சந்தித்துப் பேச மறுத்து விட்டார்.

எனினும், கியூபாவுடன் உள்ள தீராப்பகையை தனது பதவிக்காலத்தில் முடிவுக்கு கொண்டுவந்தே தீரவேண்டும் என்று திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை திறக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அரசால் நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கியூபா தொடர்பான வெளியுறவு கொள்கையில் தற்போது மாற்றம் செய்துள்ள அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவில் ஓராண்டு காலம் வசிக்கும் கியூபா மக்களுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படும் என நேற்று(12) அறிவித்துள்ளார்.

கியூபா மக்களின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான இந்த கொள்கை மாற்றத்தால் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்பாடு அடையும் என கருதுவதாகவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.