நல்லாட்சி அரசுக்கு எதிரான வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டத்தின் முதலாவது பேரணி எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் என கூட்டு எதிரணியின் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(16) பத்தரமுல்லையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இவ்வருடம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமான ஆண்டாக அமையவுள்ளது. ஏனெனில் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தவறியுள்ளது. அதனால் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்துள்ளனர்.
எனவே கூட்டு எதிர்க்கட்சியானது அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களை இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.
அதற்கிணங்க ஐந்து பிரதான காரணங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துகின்றமை, அரச நிறுவனங்களை விற்பனை செய்கின்றமை, ஊழல் மோசடி என்பனவே அவையாகும்.
எனவே எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் ஆரம்பமாகவுள்ள எதிர்ப்பு பேரணியைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஏனைய மாவட்டங்களிலும் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஆகவே நாட்டைப் பாதுகாக்க நினைக்கும் சகலரும் எம்முடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.