வவுனியாவில் சூடு பிடிக்கும் கிணறு விவகாரம்: குழப்பத்தில் மக்கள்

வவுனியா, கோவில்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுக்கிணறு அரச உத்தியோகத்தரின் பிரத்தியேக காணியில் கட்டப்பட்டுள்ளதாக கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா நகரசபையினரால் கோவில்குளம் கிராம மக்களுக்கு மாதர்சங்கத்தினூடாக வழங்கப்பட்ட 8 இலட்சம் ரூபா பெறுமதியான கிணறே தனியொருவரின் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள், வவுனியா நகரசபையால் கோவில்குளம் கிராம மக்களுக்க ஒரு பொதுக்கிணறு தேவையென கோரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் நகரசபை செயலாளர் கிராமத்திற்கு கிணறு ஒதுக்கித்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் பிரகாரம் மீண்டும் கிராம மக்கள் நகரசபை செயலாளரிடம் பொதுக்கிணறு வழங்குமாறு கோரியபோது கோவில்குளம் கிராமத்திற்கு மாதர் சங்கத்தினூடாக பொதுக்கிணறு வழங்கப்பட்டுவிட்டது என பதிலளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாதர்சங்கத்தினை தொடர்புகொண்டு கிணறு குறித்து விசாரித்தபோது கிணறு வவுனியா மாவட்டசெயலகத்தில் பணிபுரியும் பெண்மணியொருவரின் சொந்தக்காணியில் கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இச்செயற்பாடு குறித்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிடம் முறையிடப்பட்ட போதும் அதற்கான உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லையென கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன் கிராமத்தில் இரண்டு பொதுக்கிணறுகளுக்கான தேவை இருக்கும் நிலையில் அதிகாரத்திலிருப்பவர்கள் மக்களை வஞ்சித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதோடு ஊழலை தட்டிக்கேட்பவர்களை மக்கள் நலத்திட்டங்கள் உங்களுக்கு வெட்டப்படும் அல்லது வழங்கமுடியாது என மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை, அவர்கள் எங்கள் கிராமத்திற்கான பொதுக்கிணறை வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.