கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சில தினங்களுக்கு முன்பு சான்டியாகோவில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்தது.
இத்தோல்வியால் விரக்தியடைந்த பிரேசில் கெப்டன் நெய்மர், போட்டி முடிந்த பிறகு, கொலம்பியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெய்சன் முரில்லோ மீது பந்தை உதைத்தார்.
அதைத் தொடர்ந்து மற்றொரு கொலம்பிய வீரரான கார்லோஸ் பக்கா, நெய்மரை பிடித்து தள்ளிவிட்டார். இதையடுத்து நெய்மர், பக்கா இருவருக்கும் நடுவர் ரெட் கார்டு கொடுத்தார்.
அதனால் மேலும் கோபமடைந்த நெய்மர், நடுவர்களை திட்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதனால் கோபா அமெரிக்கா போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் நெய்மர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பிரேசில், தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த அணியின் பயிற்சியாளர் துங்கா கூறுகையில்;
“நெய்மர் தடை விவகாரத்தில் எங்களின் சட்ட நிபுணர்கள் குழு மேல்முறையீடு செய்யவுள்ளது. கால்பந்து விளையாட்டில் நெய்மர் மிக முக்கியமான வீரர் என்பதால் அவருக்கு தண்டனையும் அதிகமாக வழங்கப் பட்டுள்ளது” என்றார்.