இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமையன்று எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
19ஆம் திகதியன்று நாகப்பட்டினத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக 2 இயந்திர படகுகளில் புறப்பட்ட 17 மீனவர்கள் 20ம் திகதியன்று இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், காங்கேசன்துறைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
பாக் நீரிணையில், தங்களுடைய பாரம்பரியமான கடல் பகுதியில் அமைதியாக மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவது, தமிழகத்திலிருக்கும் மீனவ சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே தமிழக மீனவர்களின் 18 மீன் பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ள நிலையில், கடந்த ஜூன் 1ஆம் தேதி 14 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது 3 படகுகளும் பிடித்துச்செல்லப்பட்டன என்று கூறியுள்ளார்.
ஆகவே, இலங்கைச் சிறையில் உள்ள 31 மீனவர்களையும் அவர்களது 23 படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பிதமர் நேரடியாக தலையிட வேண்டுமென ஜெயலலிதா தனது கடிதத்தில் கோரியுள்ளார்.