மெரினா கடற்கரையில் பதற்ற நிலை – மாணவர்கள் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்…

மெரினாவில் கடந்த 8 நாட்களாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுக் கொள்வதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது.

போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்து செல்லும்படி இளைஞர்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனினும் இளைஞர்கள் கலைத்து செல்ல மறுப்பதால் அங்கிருந்து வலுகட்டயமாக பொலிஸாரினால் விரட்டப்படுதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போதைய நிலவரப்படி மெரினா போராட்டக்களம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. மாணவர்கள் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொலிஸார் அதனை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் மெரினாவை அண்டிய பகுதியில் வாழும் மீனவர்கள், போராட்டக்களத்திற்குள் வந்துள்ளனர். மாணவர்களுடன் இணைந்து அவர்களும் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், அங்கிருந்து கலைந்து செல்வது குறித்து தாம் ஆலோசிக்க கால அவகாசம் தேவை என போராட்டக்காரர்கள் பொலிஸாரை கேட்டுள்ளனர். அதற்கு அனுமதி மறுத்தால் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனை மறுக்கும் பொலிஸார் உடனடியாக கலைத்து செல்லுமாறு இளைஞர்கள் விரட்டப்படுகின்றனர். இதன் காரணமாக அங்கு பெரும் தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இளைஞர்களின் எழுச்சி பெரும் விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் அரசியல் அதிகாரம் பிரயோகிக்கப்படுவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கி, நிரந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என உலகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.