பிணைமுறி விவகாரம் குறித்த கோப் அறிக்கை மீது இன்று விவாதம்…

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில், அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் (கோப்) அறிக்கை மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் இன்று(24) இடம்பெறவிருக்கின்றது.

நாடாளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளை, விவாதமாகவே இந்த அறிக்கை மீதான விவாதம் காலை 10:30 மணிமுதல் இரவு 7:30 மணிவரையிலும் இடம்பெறவிருக்கின்றது.

இந்த அறிக்கை, கோப் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியினால், கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

54 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், சுமார் 2,000 பக்கங்களைக் கொண்ட இணைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

26 பேர் கொண்ட இந்தக் கோப் குழுவின் இறுதி அறிக்கையில், அடிக்குறிப்புகளுடன் கூடிய அறிக்கைக்கு, 16பேர் கையொப்பமிட்டிருந்தனர். அடிக்குறிப்பு இல்லாத அறிக்கைக்கு 9 பேர் கைச்சாத்திட்டிருந்தனர்.

இக்குழுவின் உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, இரண்டிலும் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மத்திய வங்கியில், 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் வரை, பிணை முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 1.6 பில்லியன் ரூபாய் மோசடிகள் தொடர்பிலேயே, கோப் குழு விசாரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.