கோப் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு சிறப்புரிமை மீறலாகும் – பிமல்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கோப் குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து நேற்று(27) நாடாளுமன்ற மற்றும் கோப குழுவின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்க சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி இவ்விடயத்தை சபாநாயகருக்குத் தெரியப்படுத்தினார்.

கடந்த சில நாட்களில் மத்திய வங்கி பிணை முறிவிவகாரம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்றில் கோப் குழு உறுப்பினர்கள் யாவரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இது குறித்த பிரதி தமக்குக் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா கூறுகையில், முதலில், பிமல் ரத்னாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்ப முடியும். கோப் குழுவின் உறுப்பினர்கள் சார்பில் இதனை கொண்டுவர முடியாது. கோப் குழுவின் தலைவர் என்ற ரீதியில் சுனில் ஹந்துன் நெத்தியே இதனை பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவர முடியும் என்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துக் கூறிய பிமல் ரத்னாயக்க, பாராளுமன்றத்தின் பொறுப்புகளையே நாம் கோப் குழுவில் நிறைவேற்றுகிறோம்.

இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தில் செயற்பட்டமைக்காக உச்சநீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்ப முடியுமென்றால் அது பாராளுமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் செயலாகும் எனச் சுட்டிக்காட்டினார்.