ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்க பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று(08) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் கூறுகையில்,
“ஜெயலலிதாவுக்கு சோதனை ஏற்பட்டபோது இரண்டு முறை முதல்வராக இருந்தேன். இந்த சூழ்நிலை மீண்டும் வரக்கூடாது என்று நினைத்தேன். காலத்தின் கட்டாயத்தால் மீண்டும் முதல்வரானேன். கட்சிக்கு எந்நிலையிலும் துரோகம் செய்யவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு உரிய பதிலைத் தருவேன். ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு ஒருபோதும் விரோதமாக செயல்பட்டது இல்லை. பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்ற பெயர் இதுவரை ஏற்பட்டதில்லை. எம்.ஜி.ஆர் கடுமையாக உழைத்து அ.தி.மு.க.வை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். ஜெயலலிதா பதினாறு ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களைப் போக்க பதவியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகத்தைப் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. விசாரணை முடிவில் நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும்.
தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார். ஆளுநர் சென்னை திரும்பியதும் அவரை சந்திப்பேன். தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். சட்டமன்றம் கூடும்போது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை கண்கூடாகத் தெரியும். எத்தனை பேர் எனக்கு ஆதரவு என்பதை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் நிரூபிப்பார்கள். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், ஜெயலலிதாவை நினைத்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…” எனத் தெரிவித்துள்ளார்.