சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட் கைது…

‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட்டை லண்டன் பொலிசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இப்போட்டி தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் ‌ஷர்ஜில் கான், காலிப் லத்தீப் ஆகியோர் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்டு செய்தது. இதனால் இருவரும் நாடு திரும்பினர்.

இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரராக விளையாடிய நசீர் ஜாம்ஷெட் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

அவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாடவில்லை. என்றாலும் வெளியே இருந்தபடி சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜாம்ஷெட் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை லண்டன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜொம்ஷெட் தவிர மற்ற 2 பேரின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் சூதாட்ட தரகர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சூதாட்டம் குறித்து பாகிஸ்கான் கிரிக்கெட் வாரியம், ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்துகிறது.