பேருவலை பிரதேசத்திலிருந்து சென்ற படகு கவிழ்ந்ததில் இதுவரை 10 பேர் பலி…

பேருவலையில் இருந்து இன்று(19) காலை கடலுக்கு சென்ற படகு தொடரில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுவரை உயிரிழந்தவர்களின் 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் சிலரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு நாகொடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் கட்டுகுருந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தவர்கள் எனவும், அவர்களின் படகு கட்டுகுருந்த பகுதியிலேயே கவிழ்ந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

குறித்த படகில் 16 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பொருட்டு கடற்படையின் 3 டோரா படகுகளும், 3 டிங்கி படகுகளும் வான்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

உயிருடன் மீட்கப்பட்டவர்கள் பேருவளை மற்றும் நாகொடை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.