இலங்கைக்கு, கொரியாவிலிருந்து கொண்டு வரப்படும் பழைய பொருட்களினால் பாதிப்பு – சுங்கப் பிரிவு…

இலங்கைக்கு, கொரியாவிலிருந்து  கொண்டு வரப்படும் பழைய பொருட்களினால் பாதிப்புகள் ஏற்படக்கூடிய ஆபத்துள்ளதாகவும், குறித்த பொருட்களினால் சுங்க வரி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுங்க பிரிவு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக வெளிநாடுகளில் கஷ்டத்தின் மத்தியில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கைளை கொள்ளையடித்து இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் கொரியாவில் சேவை செய்யும் இலங்கையர்கள், அங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் பயன்படுத்தும் பொருட்களை தீர்வை வரியின்றி இலங்கைக்கு கொண்டு வருவதற்கு வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்தி இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்கு சேவையில் ஈடுபடும் காலத்திற்கமைய அந்த வரப்பிரசாதம் உயர்வடையும். அந்த வரப்பிரசாதங்களை குறைந்த விலைக்கு கொள்ளையடிக்கும் இந்த நபர்கள் அதன் ஊடாக பழைய பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த மோசடியாளர்களினால் பாவித்த பழைய பொருட்களை கொரிய வைத்தியசாலைகள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் வேலைப்பார்க்கும் இடங்களில் இருந்து சேகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலையனை, மெத்தை மற்றும் கட்டில்கள் உட்பட பல பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றனர். வைத்தியசாலை போன்ற இடங்களில் சேகரிக்கும் பொருட்களில் தொற்று நோய்க் கிருமிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவ்வாறான தொற்று நோய் இலங்கையில் தொற்றக்கூடும் என சுங்க பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி நடவடிக்கைகளுக்கு சுங்கப்பிரிவு அதிகாரிகளும் தொடர்புப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.