சைட்டம் பட்டத்தினை ஏற்க முடியாதென்றால் பிற நிறுவனங்களதும் பட்டத்தினை தடை செய்ய வேண்டும்…

மாலபே, சைட்டம் நிறுவனத்தினால் வழங்கப்படும் வைத்திய பட்டதாரி பட்டத்தினை ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் அனைத்து தனியார் நிறுவனங்களினாலும் வழங்கப்படும் பட்டதாரி பட்டங்களும் செல்லுபடியாகாது என தடை விதிக்கப்பட வேண்டுமென இலவச கல்வி மற்றும் இலவச கல்விக்கான பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, ஜெயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அநுர குமார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சைட்டம் சர்ச்சையினால் உயர் கல்வி துறை பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் பணத்தில் வைத்திய பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது, சைட்டத்தினை எதிர்ப்பது தங்களது அடையாளத்தினை உறுத்திப்படுத்தவே அன்றி பொதுமக்களின் உயிரின் மீதுள்ள பற்றில் இல்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ பட்டத்தை வழங்க சட்டபூர்வமாக அதிகாரம் உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு ஆட்சேபனை தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்திருந்தார். அவரால் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அவர் தனது பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்த சமன் ரத்னப்ரிய கருத்துத் தெரிவித்திருந்தார்.

மேலும், இலங்கை மருத்துவ சபையானது தற்போது அரசியலுக்குள் பிரவேசித்துள்ளதாகவும், சுயாதீனமாக தீர்வொன்றினை பெறமுடியாமையுமே இதற்குக் காரணம் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)