கேப்பாபுலவு, மக்களின் காணிகள் இன்று(01) விடுவிக்கப்படும் என அறிவிப்பு…

கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பில் 42 ஏக்கர் காணி இன்று(01) விடுவிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 நாட்களாக கேப்பாபுலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.

இதனைக் கருத்திற் கொண்டு கடந்த 14 ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளிற்கும் படைத்தரப்பினருக்கும் காணி விடுவிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.

பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னதாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அவ்வேளையில்; பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனும் ஜனாதிபதியோடு கலந்துரையாடியிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பிலக்குடியிருப்பு கிராமத்தில் பொது மக்களது 42 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.