ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை கையளிப்பு…

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வண கலபொடஅத்தே ஞானசார தேரருக்கு நேற்று(28) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி நடத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஹோமாகம நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்குள் பலாத்காரமாக நுழைந்து குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பில் சட்டமா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதியரசர் விஜித் மலலசேகர மற்றும் பிரீதி பத்மன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. இதன் போது ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு ஆஜாராகியிருந்தார்.அவருக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளும் வாசித்து காண்பிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் தான் நிரபராதி என நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் அவரது வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.