தமிழக மீனவர் சுட்டுக் கொலை – புத்தகயா விஹாரை உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு…

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடிக்கு அருகே ஆதாம்பாலம் பகுதியில் நேற்றிரவு(06) மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 4 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை நோக்கி திடீரென துப்பாக்கியால் சூட்டு நடத்தப்பட்டதில், தங்கச்சிமடம் ஐயன்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மற்றோரு மீனவர் சரோனுக்கு கை மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து, வலைகளை அதே இடத்தில் விட்டு விட்டு மீனவர்கள் பதறியடித்துக் கொண்டு கரை திரும்பியதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்ஜோவின் உடலை ராமேஸ்வரம் அரசு மருத்துமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி முடித்துள்ள நிலையில், பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், போராட்டம் வெடிக்கும் என்ற அச்சத்தில் தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம், துணை வங்கிகள், எழும்பூரில் உள்ள புத்தகயா விஹார் உள்ளிட்ட இலங்கை நிறுவனங்களுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை பேச்சாளர், லுத்தினன் கொமான்டர் சமிந்த வலகுலுகே இன்று(07) மறுத்துள்ளார்.

இருப்பினும் கண்காணிப்பில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் யார் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என கடற்படை பேச்சாளர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.