ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கவே ஏவுகணை பரிசோதனை – வட கொரியா அதிரடி…

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணைகளை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

வட கொரியாவின் எதிரி நாடான தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்று வரும் நிலையில் நேற்று(06) நடத்தப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு ஜப்பான், தென் கொரியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணை பரிசோதனை நடத்தியதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வடகொரியா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அதிபர் கிம் ஜாங் உன்-னின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நமது ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக அமைந்திருந்தது. இதையடுத்து, ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் அடுத்தகட்ட பணிகளை தொடருமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.