தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக, இந்திய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி, அங்கு இந்திய துணை குடியரசுத் தலைவரை சந்தித்த போதே இதனைக் கூறியுள்ளதாக தி ஹிந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் ஜகார்தா பயணத்தை முடித்து இந்தியா திரும்புகையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஹமீது அன்சாரி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை கடற்படை தளபதியிடம் பேசினேன். இலங்கை கடற்படை அம்மாதிரி எந்நிகழ்வும் நடக்கவில்லை என்று மறுத்தார். மேலும் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று கூறினார்.