அவுஸ்திரேலியாவிலுள்ள எங்களது நிறுவனத்தின் தேவைக்காக, எனது மனைவியும் நானும், சில ஆவணங்களில் மாறி மாறிக் கையெழுத்திடுவோம்” என்று, போலி அற்றோனிப் பத்திரத்தை பயன்படுத்தி மோசடி செய்த வழக்கின் சாட்சியாளரான அவுஸ்திரேலிய வர்த்தகர் பிரயன் சாடிக், கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (14) சாட்சியமளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில, 1995ஆம் ஆண்டில் போலி அற்றோனிப் பத்திரத்தைப் பயன்படுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், அரச புலனாய்வு சேவையினரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் சாட்சியமளிப்பின் போதே அவர், மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்க முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நேற்று (14) ஆரம்பித்த போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க, தமது கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். சக்கரக் கதிரையில் மன்றுக்கு ஏன் வந்துள்ளீர்கள், என்ன நடந்தது என்று வினவினார். கடந்தவாரம் இடம்பெற்ற விபத்தொன்றில் தமது காலில் முறிவு ஏற்பட்டதாகவும், காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது தான் நலமாக இருப்பதாக உணர்வதாகவும் கூறினார்.
தனியார் வங்கியின் பங்குகள், போலி அற்றோனிப் பத்திரத்தின் மூலம் உதய கம்மன்பிலவினால் பெறப்பட்டமை, அந்த வங்கியின் அதிகாரியினால் தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் இலங்கையிலுள்ள நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதால் லசித் பெரோ என்பவரைத் தான் தெரிந்து வைத்திருந்ததாகவும் அவரின் மூலமே, அரச புலனாய்வுச் சேவையினருக்கு முறைப்பாடு செய்ததாகவும் கூறினார்.
2015ஆம் ஆண்டு அரசாங்கம் மாறிய பின், இலங்கையில் நிலைமைகள் சரியாக இருக்கும் என எண்ணியதாகவும், அற்றோனிப் பத்திரமொன்றை வழங்கி, அதன் மூலமே, தனது சார்பில் முறைப்பாடு பதிவு செய்யக் கூறியதாகவும் 6 மாதங்களின் பின்னர், இலங்கைக்கு வந்து மேலதிக முறைப்பாடொன்றை தான் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் இடம்பெற்ற குறுக்கு விசாரணையின் போது, பிரித்தானிய குடியுரிமை உள்ளவர் என்பதால், அந்த நாட்டுக் கடவுச் சீட்டும் அவுஸ்திரேலியக் கடவுச் சீட்டும் உங்களிடம் இருக்கும் என பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவீந்திர பெர்ணான்டோ கேள்வியெழுப்பினார். அத்துடன், 1992ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டுவரை இலங்கைக்கு வரவில்லையா எனவும் கேட்டதற்கு, தன்னிடம் உள்ள பிரித்தானிய கடவுச் சீட்டையே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், குறித்த காலப்பகுதியில் தான் இலங்கைக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.
1996.03.13அன்று சிட்னி ஜயசிங்கவின் மகனின் திருமணத்துக்கு வந்து சாட்சிக் கையெழுத்திட்டுள்ளீர்கள். அதற்கு முன் 1995ஆம் ஆண்டு விமானநிலையத்திலிருந்து வரும்போது, கம்மன்பிலவும் ஜகத்தும் சிட்னி ஜயசிங்கவின் மகனால், கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறினீர்களே, என்று வினவினார்.
கம்மன்பிலவைச் சந்தித்த ஆண்டு, தனக்கு ஞாபகமில்லை எனவும், தேயிலைக் கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க 3 ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டதாகவும் அதிலொன்றாக இருக்கலாம் எனவும் கூறிய சாட்சியாளர், குறித்த கையொப்பம் தன்னுடையதை ஒத்திருப்பதாகவும் மன்றில் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, 1997ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உங்களது நிறுவனத்தின் சந்திப்பில் பங்குபற்றியுள்ளீர்கள், உங்களுடைய மனைவியின் கையெழுத்தை இட்ட குற்றச்சாட்டின் பேரில் உங்களுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது என்று, சட்டத்தரணி வினவினார். இலங்கைக்கு வந்தமை பற்றி கருத்து தெரிவிக்காத அவர், தானும் மனைவியும் தங்களுக்குள் இருந்த புரிந்துணர்வின் அடிப்படையில், பல ஆவணங்களில் மாறி மாறிக் கையெழுத்திட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலிய கடவுச்சீட்டை மன்றில் சமர்ப்பிக்குமாறு கூறிய சட்டத்தரணி, எந்த நாட்டிலும் ஒருவருக்காக இன்னொருவர் கையெழுத்திடுவது, குற்றமாகும் என்று கூறியதுடன், சாட்சியாளர் ஒரு பொய்ச்சாட்சி என்று கூறியதற்கு, சாட்சியாளர் அதை நிராகரித்தார். வழக்கு விசாரணைகள், வியாழக்கிழமை (16) வரை ஒத்திவைக்கப்பட்டன.