கிழக்கில் பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்த ஒவ்வொரு சுகாதார பிராந்தியங்களும் அதிகளவிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு குறித்த டெங்கு நோயினை கட்டுப்படுத்தி வந்த நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் மாத்திரம் தற்போது அதிகளவிலான பாதிப்புக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1200 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் கிண்ணியா வைத்தியசாலை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அப்துல் ஹலிம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பிலும் நோய் தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் 7.9 மில்லியன் ரூபாவினை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது நிலை குறித்து ஆராய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விஜயமொன்றினை நேற்று(16) மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, சுகாதார அதிகாரிகளிடம் அவசரத் தேவைகள் குறித்த விபரங்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் தற்போதைய வைத்தியசாலையின் களஞ்சியசாலையொன்றிலுள்ள
பொருட்களை அப்புறப்புறப்படுத்துவதற்கான கொள்கலன்களை வாடகைக்கு அமர்த்துவதற்கு ரூபா 2 மில்லியனை அவசரமாக ஒதுக்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னும், இடவசதியில்லாமல் வீடுகளிலிலேயே சிகிச்சை பெற்று வரும் வெளி நோயாளர்களை தங்க வைப்பபதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள கிண்ணியா ஜாயா
வித்தியாலயத்துக்கான பௌதீக ஆளணி வசதிக்கென 5.9 மில்லியன் ரூபாவையும் உடன் ஒதுக்குவதாக அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் பரவி வரும் டெங்குத் தாக்குதலுக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க 5 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாகவும் பிரதமர் காரியாலய செய்திப் பிரிவு நேற்று(16) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், கிண்ணியா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட சிகிச்சைப் பிரிவுக்கென 9 விசேட வைத்தியர்கள் கண்டியிலிருந்து வருகை தரவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் A.L.M நஸீர் தெரிவித்திருந்தார்.