மகளிர் உலக கோப்பை கால்பந்து – இங்கிலாந்து, அமெரிக்கா கால் இறுதிக்கு தகுதி

7–வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி கனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் 24 நாடுகள் பங்கேற்றன.

கடந்த 17–ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. இதன் முடிவில் கனடா, சீனா, ஜெர்மனி, நார்வே, ஜப்பான், கேமரூன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், கொலம்பியா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவீடன், சுவிட்சர்லாந்து, தென் கொரியா, நெதர்லாந்து ஆகிய 16 அணிகள் 2–வது சுற்றுக்கு நுழைந்தன.

நியூசிலாந்து, தாய்லாந்து, ஐவேரிகோர்ஸ்ட், ஈக்வடார், நைஜிரியா, கோஸ்டாரிகா, ஸ்பெயின், மெக்சிகோ ஆகிய 8 அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறின.

கடந்த 20–ந் தேதி 2–வது சுற்று ஆட்டங்கள் தொடங்கின. ஜெர்மனி, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்று இருந்தன.

நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து– நார்வே அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2–1 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. ஆட்டத்தின் 54–வது நிமிடத்தில் நார்வே முதல் கோலை அடித்தது. குல்ப் ரேன்ட்சன் இந்த கோலை அடித்தார்.

61–வது நிமிடத்தில் இங்கிலாந்து பதில் கோல் அடித்து சமன் செய்தது. ஹாட்டன் இந்த கோலை அடித்தார். 76–வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை பிரான்ஸ் 2–வது கோலை அடித்தார். இங்கிலாந்து அணி கால் இறுதியில் கனடாவை சந்திக்கிறது.

மற்றொரு 2–வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா– கொலம்பியா அணிகள் மோதின. இதில் அமெரிக்கா 2–0 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

அமெரிக்க அணியில் மார்கன் (53–வது நிமிடம்), லியாட் (66–வது நிமிடம், பெனால்டி) கோல் அடித்தனர். அமெரிக்கா அணி கால் இறுதியில் சீனாவை 26–ந் தேதி எதிர்கொள்கிறது.

இன்றுடன் 2–வது நாள் சுற்று ஆட்டம் முடிகிறது. இன்று நடைபெறும் கடைசி 2–வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான்–நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

நாளையும், நாளை மறுநாளும் ஓய்வு நாளாகும். 26–ந் தேதி கால் இறுதி ஆட்டம் தொடங்குகிறது