தமிழக மீனவர் கொலை – இலங்கை கடற்படைக்கு எதிராக ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு…

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதில், இலங்கை கடற்படையினருக்கு எதிராக நடவடிக்கை கோரிய வழக்கில், படகிலிருந்த GPS கருவியை ஆய்வு செய்ய சென்னை IID இற்கு அனுப்பப்பட்டுள்ளது பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் ராஜூ தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

‘..இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேரை, இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. அவர்களின் குடும்பத்தினர் வாழ்க்கை நடத்த போராடுகின்றனர். மார்ச் 6 ல் மீன் பிடிக்கச் சென்ற பிரிட்ஜோ என்ற மீனவரை இலங்கை கடற்படை சுட்டிக் கொன்றது. மண்டபம் மரைன் பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையில், நமது மீனவர்களை பாதுகாக்க இந்திய கடற்படையினரை நிறுத்தவில்லை. கேரள மீனவர்களை இத்தாலி கடற்படை சுட்டுக் கொன்றது. சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இத்தாலி அரசு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியது.

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்..’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை விசாரித்த தமிழக அரசு வழக்கறிஞர் இதன்போது கூறியதாவது,

சம்பவம் தொடர்பாக பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது, பிரிட்ஜோ படகில் இருந்த GPS கருவியை ஆய்வு செய்ய சென்னை IID இற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதனையடுத்து, ´அது பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும்,´ என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

(rizmira)