என் தந்தை மீது குற்றச்சாட்டா? மறுக்கும் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 5 அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை வெளிநாட்டு முகாமைத்துவ நிறுவனங்களிடம் வழங்க நடவடிக்கை எடுத்து வந்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியதில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச,

இது முற்றிலும் பொய்யான கருத்து. எமது ஆட்சிக்காலத்தில் எமது நாட்டுக்கு சாதமான உடன்படிக்கைகளை செய்தோம். எனினும் அவற்றின் ஊடாக அரச வளங்களை விற்பனை செய்யவோ, தனியார்மயப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த அமைச்சர்கள் தொடர்ந்து பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். என் தந்தை மீது இவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர் என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த 2011 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை விமான நிலையம், கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம், துறைமுக நகரம், நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றின் முகாமைத்துவத்தை வெளிநாடுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வந்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.