மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனை வரை குறைக்குமாறு, நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புத் தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கை மற்றும் சட்டக் காரணங்களைத் தேடியறியும் சிறப்புப் படையணியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது அறிக்கையிலேயே மேற்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைப்பதற்காக, கைதிகளை சிறைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாகவும், தண்டப்பணம் செலுத்த முடியாதவர்களைச் சிறைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாகவும் மாற்று ஏற்பாடுகள் பல பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் அல்லாத நபர்கள் 9,552 பேர் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது, கைதிகளின் முழு எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 52 சதவீதமாகும்.
தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம், ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையும் குறைக்க முடியும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,082 ஆகும். அவர்களில், 726 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் முழு எண்ணிக்கை 555 ஆகும். அதில், 463 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.