கோடிக்கணக்கான சொத்துக்களை நாட்டுக்காக கொடுத்த சிறந்த அரசியல்வாதி

தனது கோடிக்கணக்கான சொத்துக்களை நாட்டுக்காக செலவு செய்த ஒரு தலை சிறந்த மூத்த அரசியல்வாதி ரட்னசிறி விக்ரமநாயக்க என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க நாட்டுக்காக அளப்பரிய சேவைகளைச் செய்தவர். சுதந்திரக்கட்சியை முன்னேற்றியதில், அவருடைய பங்களிப்பு பிரதானமானது.

அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் இருந்தன. களுத்துறை மாவட்டத்தில் தனி கடை வீதி உட்பட ஏராளமான சொத்துகள் இருந்தன.

ஆனால் அவை அனைத்தையும் தனது அரசியல் பயணத்தில் செலவு செய்தார். தனது சொத்துகளை நாட்டுக்காக செலவு செய்த ஓர் அரசியல் தலைவர்.

இப்போதைய காலகட்டத்தில் அரசியலை பயன்படுத்தி சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றவர்களும், பதவியைக் கொண்டு தங்கள் பைகளை நிரப்பிக் கொள்பவர்களுமே அதிகமாக இருக்கின்றார்கள்.

ஆனால் நேர்மையான ஓர் சிறந்த அரசியல்வாதியாகவும், ஏனையோருக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஒருவர் ரட்னசிறி விக்ரமநாயக்க.

அத்தகைய ஒரு சிறந்த மூத்த அரசியல்வாதியின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கே ஏற்பட்ட ஓர் இழப்பாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.