மீதொட்டமுல்ல அனர்த்தம் குறித்த அறிக்கை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி..

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்ததில் அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் பற்றிய கணிப்பீடுகளையும், மதிப்பீடுகளையும் மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை ஐந்து தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அனர்த்தத்திற்கு உள்ளான மக்களுக்கு கூடியளவு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அந்த நடவடிக்கைகளின் போது பணத்தை ஒரு தடையாக கருதவேண்டாம் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

“மீதொட்ட முல்ல பகுதியில் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மக்களை அந்த பிரதேசத்திலிருந்து அகற்றி அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களுக்கும், சொத்துக்களுக்கும் நட்டஈடு வழங்க வேண்டியுள்ளது. ஆகவே அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களின் எண்ணிக்கை மற்றும் சேதமடைந்த சொத்துக்கள் பற்றிய கணிப்பீடுகளையும், மதிப்பீடுகளையும் மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை ஐந்து தினங்களுக்குள் எனக்கு சமர்ப்பியுங்கள்.

மக்களின் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். அத்துடன் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் அம்மக்களது தேவைகளைக் கண்டறிந்து உதவிகளை வழங்குங்கள்” என்றார்.

தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், மக்களுக்கான உதவிகளை வழங்குவதற்கும், மீள குடியமர்த்துவதற்கும் அரசினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அதேநேரம் குறித்த விடயம் தொடர்பான கூட்டங்களை மூன்று தினங்களுககொரு தடவையாவது நடத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டதற்கு அமைவாக எதிர்வரும் புதன்கிழமை மு.ப. 8.30க்கு இடர் முகாமைத்துவ அமைச்சில் மீண்டும் மற்றுமொரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.